புத்ராஜெயா, மார்ச் 15- ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி மற்றும் ஏழு மாதப் பெண் குழந்தையை படுகொலை செய்த வழக்கில் முன்னாள் லோரி ஓட்டுநர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் மீண்டும் நிலை நிறுத்தியது.
சத்விண்டர் சிங் என்ற அந்த ஆடவரின் 39வது பிறந்த நாளான நேற்று இந்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அரசுத் தரப்பின் மேல் முறையீட்டை ஏற்றுக் கொண்ட மூவரடங்கிய கூட்டரசு நீதிமன்றம் நீதிபதிகள் குழு அவ்வாடவருக்கு மரண தண்டனையை ஏகமனதாக உறுதி செய்தது. நீதிபதிகள் டத்தோ ரோட்ஸரியா பூஜாங், டத்தோ அபு பாக்கார் ஜாயிஸ், டத்தோ அப்துல் கரிம் அப்துல் ஜாலில் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்ததை நியாயப்படுத்த முடியாது என்பதால் சத்விண்டர் சிங்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சரியானதே என தாங்கள் கருதுவதாக நீதிபதி ரோட்ஸாரியா தனது தீர்ப்பில் கூறினார்.
சத்விண்டர் சிங்கே குற்றவாளி என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்ப சாட்சியங்களை நிராகரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்டை வீட்டார் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் உயிரிழந்தவர்களுடன் உடனிருந்த கடைசி நபர் அவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
இந்த கொலையை நியாயப்படுத்துவதற்காக சம்பவ இடத்தை சத்விண்டர் சிங் உருவாக்கியுள்ளார் என்ற உயர் நீதிமன்றத்தின் முடிவில் கூட்டரசு நீதிமன்றம் உடன்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 3.55 மணிக்கும் 4.15 மணிக்கும் இடையே தாமான் ரவாங் பெர்டானா 2இல் உள்ள இரட்டை மாடி தொடர் வீடொன்றில் டி.கமல்ஜிட் (வயது 34) மற்றும் இஸ்லின் கவுர் சிந்து ஆகியோரை படுகொலை செய்த குற்றத்திறக்காக அவருக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மரண தண்டனை விதித்தது.
எனினும், சத்விண்டர் சிங்கிற்கு எதிரான மரண தண்டனையை கடந்தாண்டு நவம்பர் மாதம் ரத்து செய்த மேல் முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நோக்கமின்றி மரணம் விளைவித்த பிரிவுக்கு மாற்றி 20 ஆண்டுச் சிறைத்தண்டயை விதித்தது.


