கோலாலம்பூர், மார்ச் 15- பூச்சோங் தொழிற்பேட்டைப் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஆறு தொழிற்சாலைகள் மற்றும் ஒரு கிடங்கு சேதமடைந்தன.
இத்தீவிபத்து தொடர்பில் காலை 11.40 மணிக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழு முதலில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (நடவடிக்கை ) அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
தீ விபத்தில் இரண்டு எஃகு தொழிற்சாலைகள் சேதமடைந்ததன. இவை தவிர உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, காம்ப்ரெஸர் தொழிற்சாலை மற்றும் வெல்டிங் தொழிற்சாலை ஆகியவையும் பாதிக்கப்பட்டன என்றும் அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தீக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூச்சோங், சுபாங் ஜெயா, சைபர்ஜெயா, ஜாலான் பெஞ்சாலா, பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 42 அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக முக்லிஸ் கூறினார்.


