NATIONAL

கிள்ளானில் பார்க்கிங் பகுதியிலிருந்த 28 வாகனங்கள் மாயம்- போலீஸ் விசாரணை

15 மார்ச் 2025, 3:33 AM
கிள்ளானில் பார்க்கிங் பகுதியிலிருந்த 28 வாகனங்கள் மாயம்- போலீஸ் விசாரணை

ஷா ஆலம், மார்ச் 15 -  கிள்ளான்,  பெண்டமார் கோத்தா பாயு இமாஸில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்திலிருந்து 28 கார்களை கும்பல் ஒன்று  கடந்த  வியாழக்கிழமை எடுத்துச் சென்றது  குறித்த புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.அந்த கார்கள் காப்பீட்டு கோரிக்கை தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்காக   காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் அக்கப்பல் நிறுவனத்தின் இயக்குநரான 44 வயது வெளிநாட்டவர் அன்றைய தினம் மாலை 6.24 மணிக்கு புகார் அளித்ததாக தென் கிள்ளான்  மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சா சூங் ஃபோங் தெரிவித்தார்.

புகார்தாரரின் கப்பல் நிறுவனம் கோலக் கிள்ளானிலிருந்து கோத்தா கினாபாலுவுக்கு கப்பல் மூலம் 1,517 கார்களை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.

பாதி வழியில் கப்பலில் தீ  ஏற்பட்டது. எனினும்  கடல் மீட்புக் குழுவினர்  தீயை அணைத்து பெரும்பாலான சரக்குகளை காப்பாற்றினர். அந்த கப்பலிலிருந்து  மீட்கப்பட்ட வாகனங்கள் கிள்ளானுக்கு கொண்டு செல்லப்பட்டு கார் நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டன.

கப்பல் நிறுவனத்தால் கொண்டு செல்லப்பட்ட பல வாகனங்கள் காப்பீடு செய்யப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அனைத்து கார் உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறுவதற்கான  கடல் மீட்புச் செலவுகளை ஈடுகட்ட ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்று கப்பல் நிறுவனம்  கோரியுள்ளது என்று சா கூறினார்.

இதனால் அதிருப்தியடைந்த கார் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற  செம்போயன் பயனீட்டாளர்  சங்கத்தின் உதவியை நாடினர். பல கூட்டங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்ற   போதிலும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காரை உரிமையாளரிடம் ஒப்படைக்க கப்பல் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை.

இச்சூழலில்  கும்பல் ஒன்று  கார் நிறுத்துமிடத்திற்குள் நுழைந்து கப்பல் நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாமல் வாகனங்களை எடுத்துச் சென்றது என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 448 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர்,

சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது தென் கிள்ளான்  மாவட்ட காவல் தலைமையகத்தையோ 03-33762222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.