கோத்தா பாரு, மார்ச் 15- மச்சாங், கம்போங் பங்கால் மெம்பலம் பகுதியில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையின்போது நால்வரைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 26,640 வெள்ளி மதிப்புள்ள 855 கெத்தும் போதை பான பாக்கெட்டுகள் மற்றும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த இடத்தில் கெத்தும் நீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கிளந்தான் மாநில காவல் துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாலை 6.30 மணியளவில் இந்த சோதனையை மேற்கொண்டதாக மச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ஷஃபிகி ஹுசின் கூறினார்
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 24 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
இச்சோதனையின் போது கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் 855 லிட்டர் பழுப்பு நிற திரவம் மற்றும் கோடீன் (இருமல் மருந்து) என சந்தேகிக்கப்படும் திரவம் கொண்ட 855 பிளாஸ்டிக் பைகள் ஒரு குளிர்சாதன பெட்டி மற்றும் ஒரு பெரிய பீப்பாயில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட கெத்தும் நீர் மற்றும் உபகரணங்களின் மொத்த மதிப்பு 26,640 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு விஷச் சட்டத்தின் 30(3) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், போதைப்பொருள் மற்றும் கெத்தும் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருடனும் காவல்துறை சமரசம் செய்யாது எனவும் வலியுறுத்தினார்.


