கோலாலம்பூர், மார்ச் 15 - சபுரா எனர்ஜி பெர்ஹாட் நிறுவனம் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) இரண்டு விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட அந்த நிறுவனம் தொடர்பான தொடக்கக்கட்ட விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு சபுரா கெஞ்சானா பெட்ரோலியம் பெர்ஹாட் என்ற பெயரில் அந்நிறுவனம் செயல்பட்டபோது நிகழ்ந்ததாகக் கூறப்படும் பண மோசடி மற்றும் முறைகேடுகளில் அந்த இரண்டு விசாரணை அறிக்கைகளும் கவனம் செலுத்துகின்றன.
ஊழல் தவிர்த்து, நிர்வாகத்தில் காணப் பட்ட பலவீனங்கள் தொடர்பான பிரச்சினைகள் மீதும் அந்த விசாரணை கவனம் செலுத்தும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, இவ்விவகாரத்தை உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டம் மற்றும் 2001 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த விசாரணை அறிக்கை திறக்கப் பட்டதாகக் கூறினார்.


