பட்டர்வொர்த், மார்ச் 15- பிறையில் உள்ள தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் கூரையைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் 12 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
நேற்று காலை 11.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்தவுடன் பினாங்கு மாநில வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அத்துறையின் இயக்குநர் ஹைரோஸி அஸ்ரி கூறினார்.
இந்த விபத்தில் தலையில் பலத்தக் காயங்களுக்குள்ளான 39 வயதுடைய அந்த உள்நாட்டுத் தொழிலாளிக்கு சக ஊழியர்கள் முதலுதவி அளிக்க முயன்றதாகவும் எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் சொன்னார்.
இந்த விபத்தில் இறந்த அந்த ஆடவர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையினலால் நியமிக்கப்பட்ட குத்தகையாளரிடம் வேலை செய்து வரும் தொழிலாளி என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் மாற்றப்படாமலிருந்த கூரையின் எஸ்பெஸ்டோஸ் ஓட்டின் மீது அந்த ஆடவர் கால் வைத்ததைத் தொடர்ந்து அது உடைந்து அவர் 12 மீட்டர் உயரத்திலிருந்து தரையில் விழுந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை அங்கு உடனடி பணி நிறுத்தத்தை அமல் செய்ய மாநில வேலையிட பாதுகாப்பு இலாகா உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் பணி நடைமுறைகளை சீரமைப்பதற்கும் ஏதுவாக உள் விசாரணையை நடத்தும்படி சம்பந்தப்பட்ட முதலாளி பணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


