ஷா ஆலம், மார்ச் 14 - இருபதாயிரம் வெள்ளியை கையூட்டாகப் பெற்றதாக இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் தமக்கெதிராக கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை செய்தி இணைய ஊடகப் பத்திரிகையாளர் ஒருவர் மறுத்து விசாரணை கோரினார்.
மலேசியாகினி இணைய ஏட்டில் பாகிஸ்தான் அந்நியத் தொழிலாளர் தருவிப்பு கும்பல் தொடர்பான கட்டுரைகளை பதிவேற்றாமல் இருக்கவும் அவற்றை நீக்கவும் தூண்டுவதற்கும் பாகிஸ்தான் குடிமகனான முகமது ஜாஹித்திடமிருந்து ஊழல் முறையில் பணத்தைப் பெற்றதாக 42 வயதான பி. நந்தகுமார் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் இங்குள்ள ஒரு ஹோட்டலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, லஞ்சத்தின் தொகை அல்லது மதிப்பை விட ஐந்து மடங்குக்குக் குறையாத அபராதமும் அல்லது 10,000 வெள்ளி இதில் எது அதிகமோ அது விதிக்க வகை செய்யும் 2009ஆம் ஆண்டு
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 16 (a)(A) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க வகை செய்யும் 24வது பிரிவின் கீழ் நந்தகுமார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரை 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை அரசு வழக்கறிஞர் அலிஸ் இஸ்ஸாட்டி அசுரின் முகமது ருஸ்டி பரிந்துரைத்தார்.
மேலும், அவர் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையும் விதிக்க வேண்டும். அதோடு, சாட்சிகளை தொந்தரவு செய்ய கூடாது மற்றும் எதிர்காலத்தில் வழக்கைப் பாதிக்கக்கூடிய அல்லது பாரபட்சம் காட்டக்கூடிய கட்டுரைகள் அல்லது கருத்துகளைப் பதிவேற்றக் கூடாது என குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, தனது கட்சிக்காரர் 18 மற்றும் 11 வயதுடைய இரு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளதால் ஜாமீன் தொகையை 5,000 வெள்ளியாக நிர்ணயிக்கும்படி நந்தகுமாரின் வழக்கறிஞர் பி.புருஷோத்தமன் கேட்டுக் கொண்டார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒரு கும்பலை முறியடிக்க உதவியவர்களில் ஒருவராகவும் அரசாங்கத்திற்கு உதவ தனது உயிரைப் பணயம் வைத்தவர்களில் ஒருவராகவும் விளங்கிய நந்தகுமாரின் பங்கை குறைந்தபட்ச ஜாமீன் வழங்குவதில் நீதிமனாறம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
எனது கட்சிக்காரர் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர். நாட்டின் நீதித்துறை அமைப்பு ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. மேலும் அதிகப்படியான ஜாமீன் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் இந்த வழக்கு தீர்க்கப்படும் வரை அவர் சிறையில் வாட வேண்டியிருக்கும் என அவர் வாதிட்டார்.
நீதிபதி டத்தோ முகமது நாசீர் நோர்டின், நந்த குமாரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.


