பர்மிங்ஹம், மார்ச் 14 - அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு தேசியப் பூப்பந்து மகளிர் அணி பெர்லி தான்-தீனா, இந்தோனேசியாவின் அம்ரியானி ரஹாயு - சித்தி படியா சில்வா ஜோடியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்
இந்தோனேசியா அணியை 21-16, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வெறும் நாற்பதே நிமிடங்களில் தோற்கடித்து அவர்கள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பர்மிங்ஹமில் காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது மலேசிய இரட்டையராக பெர்லி-தீனா திகழ்கின்றனர்.
இந்த ஆட்டத்தின் இரண்டாவது செட்டில் 13-7 என மலேசியா முன்னணியில் இருந்த போது தீனாவுக்கு காயம் ஏற்பட்டதால், இந்தோனேசிய ஜோடி வெற்றி பெறும் வாய்ப்பிருந்தது.
ஆனால், ஆட்டத்தை சமாளித்து வெற்றியுடன் முடிப்பதை அவர் உறுதிச் செய்தார்.
உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்திலுள்ள பெர்லி தான்-தீனா ஜோடி, 29-ஆவது இடத்திலிருக்கும் அந்த இந்தோனேசிய ஜோடியை வீழ்த்துவது, 6 ஆட்டங்களில் இது நான்காவது முறையாகும்.
பெர்லி தான்-தீனா இருவரும் காலிறுதி ஆட்டத்தில், கடந்தாண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தங்களைத் தோற்கடித்த ஜப்பானின் இணையைச் சந்திப்பர்.


