ஷா ஆலம், மார்ச் 14 - எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கெஅடிலான்
கட்சித் தேர்தலில தாம் தற்போது வகித்து வரும் மகளிர்ப் பிரிவுத்
துணைத் தலைவி பதவியைத் தற்காக்கவுள்ளதாக ஜூவாய்ரியா
ஜூல்கிப்ளி கூறியுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கு
ஏதுவாக உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்பட மகளிர்ப்
பிரிவின் அடிமட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைளில் தாம் கவனம்
செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கெஅடிலான் கட்சி மகளிர்ப் பிரிவில் உறுப்பினர் சேர்க்கை மிகவும்
மந்தமாக உள்ளது. உறுப்பினர்களை குறிப்பாக இளையோரை கட்சியின்
பால் ஈர்ப்பதில் நான் முன்னுரிமை அளிப்பேன் என அவர் சொன்னார்.
ஃபாட்லினா சீடேக் தலைமையில் கெஅடிலான் மகளிர்ப் பிரிவு
களையிழந்து காணப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து
கருத்துரைத்த அவர், ஒவ்வொரு தலைவருக்கும் தனித்துவமான
தலைமைத்துவ பாணி இருக்கும் என்பதால் முந்தைய தலைமைத்துவத்துடன் ஒப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது என்று அவர் கூறினார்.
ஒற்றுமை அரசை வழிநடத்தும் கெஅடிலான் கட்சியின் தற்போதைய
நிலைக்கு ஏற்ப நடப்பு தலைமைத்துவம் அடிமட்ட நிலையில் பல
திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, பிறருடன் ஒப்பிடுவது சிறிதும் நியாயமில்லை. ஒவ்வொரு
தலைமைத்துவமும் தனக்கேற்ற தனித்துவமான பணியைக்
கொண்டிருக்கும். இருப்பினும், கட்சியின் நடவடிக்கைள் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.
கெஅடிலான் கட்சியின் தொகுதி நிலையிலான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 11
முதல் 20 வரையிலும் தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் மே 24ஆம்
தேதியும் நடைபெறும்.


