குவாந்தான், மார்ச் 14 - சமூக ஊடகத்தில் வெளியான இல்லாத கார்
விற்பனை விளம்பத்தினால் கவரப்பட்ட ஆடவர் ஒருவர் தனது சேமிப்புத்
தொகையான 119,072.27 வெள்ளியை மோசடிக் கும்பலிடம் பறிகொடுத்தார்.
பேஸ்புக் பக்கத்தில் வெளிவந்த மஸ்டா சிஎக்ஸ்-5 ரக க் காரின்
விற்பனை தொடர்பான விளம்பரத்தைக் கண்ட அந்த 38 வயது ஆடவர்
புலனம் வாயிலாக சம்பந்தப்பட்ட சந்தேக நபரைத் தொடர்பு கொண்டதாகப்
பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.
அந்த சந்தேக நபர் கேட்டுக் கொண்டபடி பாதிக்கப்பட்ட நபர் 119,072.27
வெள்ளியை இரு வங்கிக் கணக்குகளில் சேர்த்துள்ளார். பணம்
செலுத்தப்பட்டவுடன் அச்சந்தேக நபர் தனது பேஸ்புக் பக்கத்தை மூடி
விட்டதோடு புலனத்தையும் முடக்கி விட்டார் என அவர் சொன்னார்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் தனது வாழ்நாள் சேமிப்புத்
தொகை பறிபோனது தொடர்பில் காவல் துறையில் புகார் அளித்தார் என்று
அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
மலிவான விலையில் பொருள்கள் விற்கப்படுவது தொடர்பில் வெளிவரும்
விளம்பரங்களை எளிதில் நம்பிவிட வேண்டாம் என பொது மக்களை
அவர் கேட்டுக் கொண்டார்.


