ஷா ஆலம், மார்ச் 14 - எண்பது லட்சம் அமெரிக்க டாலர் வரை இலாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தையால் கவரப்பட்டு இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஒருவர் தனது சேமிப்புத் தொகையான 23 லட்சம் வெள்ளியை இழந்தார்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டது தொடர்பில் 62 வயதான உள்ளூர் நபரிடமிருந்து தமது துறைக்கு நேற்று புகார் கிடைத்ததாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ எம் குமார் கூறினார்.
முதலீட்டுத் திட்டத்தை வழங்கும் புலனக் குழுவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தாம் இணைந்ததாக பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பெரித்தா ஹரியான் இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.
இலாபத்தைக் காணவும் முதலீட்டை நிர்வகிக்கவும் ஒரு வலைத்தள இணைப்பு பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டது.
எண்பது லட்சம் அமெரிக்க டாலர் வரை அதிக லாபம் கிடைக்கும் என வழங்கப்பட்ட வாக்குறுதியால் ஈர்க்கப்பட்ட அவர் கடந்தாண்டு நவம்பர் 27 முதல் மார்ச் 4 வரை மொத்தம் 23 லட்சம் வெள்ளியை நான்கு இணைய பரிமாற்றங்கள் மூலம் நான்கு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார் என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இலாபத் தொகையை மீட்க இயலாததைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் நேற்று ஜோகூர் காவல் நிலைய தலைமையகத்தில் புகாரை அளித்ததாகக் குமார் கூறினார்.
இந்த மோசடி தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


