ஈப்போ, மார்ச் 14 - கடந்த செவ்வாய்க்கிழமை பிஸியோதெராப்பி மையத்திற்குச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒரு முதியவர் நேற்று இங்குள்ள ஒரு ஹோட்டல் அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
ஆர். தினகரன் (வயது 62) என்ற அந்த நபரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று மாலை சுமார் 4.20 மணியளவில் தமது துறைக்கு தகவல் கிடைத்ததாக
ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அவ்வாடவர் மரணமடைந்து விட்டதை உறுதிப்படுத்தினர். சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட தொடக்கக்கட்ட பரிசோதனையில் அவ்வாடவர் படுக்கையில் கிடந்ததையும் இறந்தவரின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாடவரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய அவரது உடல் ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவரது மரணத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த மார்ச் 11ஆம் தேதி மாலை 4.49 மணியளவில் கம்போங் கெபாயாங், தாமான் பூலாய் ஹைட்டில் உள்ள தனது வீட்டிலிருந்து சாம்பல் நிற ஹோண்டா எக்கோர்ட் காரில் வெளியே சென்ற ஆடவர் ஒருவர் வீடு திரும்பவில்லை என்ற தகவல் தனது துறைக்குத் கிடைத்ததாக அபாங் ஜைனல் அபிடின் முன்னதாக தெரிவித்திருந்தார்.


