கோலாலம்பூர், மார்ச் 14 - போலி கல்வி சான்றிதழ்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க, சட்டம் 555 அல்லது 1996-ஆம் ஆண்டு தனியார் உயர்கல்வி கழகச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அக்குற்றத்தைப் புரியும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும், தற்போதுள்ள சட்ட விதிகள் போதுமானவை என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
"இதுவரை நம்மிடம் போதுமான விதிகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். அதாவது அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரிம. 200,000 அபராதம் விதிக்கப்படலாம்', என்று அவர் கூறினார்.
போலி கல்விச் சான்றிதழ் பிரச்சனைக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, 1996-ஆம் ஆண்டு தனியார் உயர்கல்வி கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுமா என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர்.அருணாசலம் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு டாக்டர் சம்ரி இவ்வாறு பதிலளித்தார்.
போலி கல்விச் சான்றிதழை யாரும் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய, நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைத்து உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் இடையே பொது தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற லிங்கேஸ்வரனின் பரிந்துரையையும் சம்ரி வரவேற்றார்.
-பெர்னாமா


