ஷா ஆலம், மார்ச் 14 - சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானில் நிகழ்ந்த 17 வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்களில் தொடர்புடைய மூன்று அந்நிய நாட்டு குற்றவாளிகள் சிப்பாங்கில் இன்று அதிகாலை சுட்டுக கொல்லப்பட்டனர்.
தங்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ்காரர்களை அக்கொள்ளையர்கள் பாராங் கத்தியால் தாக்க முயன்றதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (உளவு/செயலாக்கம்) துணை இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறினார்.
மிகவும் ஆபத்தானவர்கள் மற்றும் பயங்கரமானவர்கள் என வர்ணிக்கப்படும் 35 முதல் 40 வயது வரையிலான அந்த மூவரும் டேசா விஸ்தா குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையிட முயன்றதாக அவர் சொன்னார்.
அந்த வீட்டின் பாதுகாப்பு அலாரம் எச்சரிக்கை ஒலியை எழுப்பத் தொடங்கியதைத் தொடர்ந்து பாராங்கத்தியேந்திய முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டில் நுழைந்ததை அதன் உரிமையாளர் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தங்களின் வருகையை வீட்டு உரிமையாளர் அறிந்து கொண்டார் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் அந்த கொள்ளையர்கள் நீர் தொட்டி அருகில் உள்ள காட்டுப் பகுதி நோக்கி ஓடிச் சென்று பதுங்கிக் கொண்டனர் என்றார் அவர்.
இச்சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொது மக்கள் கொடுத்த தகவல் மற்றும் உளவு நடவடிக்கையின்
வாயிலாக காட்டில் அவர்களின் மறைவிடத்தை போலீசார் அடையாளம்
கண்டனர். அக்கொள்ளையர்கள் போலீஸ்காரர்களை தாக்க முயன்ற
வேளையில் பதிலுக்கு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று அவர்
தெரிவித்தார்.
தங்களை எதிர்ப்பவர்களை காயப்படுத்த சிறிதும் தயங்காத மூர்க்க குணம் கொண்டவர்களாக அக்கும்பல் உறுப்பினர்கள் விளங்கினர். சுங்கை பூலோவில் ஒரு வீட்டில் கொள்ளையிடும போது தங்களை எதிர்த்து போராடியவரை வெட்டிக் காயப்படுத்தியது இக்கும்பலின் மூர்க்கத்தனத்திற்கு ஒரு உதாரணமாகும் என்றார் அவர்.


