அலோர் காஜா, மார்ச் 14 - மலாக்கா மாநில ஆளுநர் துன் முகமது அலி
ருஸ்தாமின் வாகனத்திற்கு பாதுகாப்பாகச் சென்ற போக்குவரத்து
போலீஸ்காரர் ஒருவர் இங்குள்ள டுரியான் துங்கால், ஸ்ரீ பாயான் சாலை
சுற்றுவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தார்.
நேற்றிவு 10.45 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சார்ஜன் முகமது
தர்மிஸி மானாப் (வயது 50) என்ற போக்குவரத்து போலீஸ்காரர்
காயங்களுக்குள்ளானதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சமா கூறினார்.
இந்த விபத்து நிகழ்ந்த போது முகமது தர்மிஸி உயர் சக்தி கொண்ட
மோட்டார் சைக்கிளில் டுரியான் துங்காலில் இருந்து பத்து பெரெண்டாம்
விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த சாலை சுற்றுவட்டத்தில் புரோட்டோன் எஸ்70 ரக காரைச் செலுத்திய
51 வயது ஆடவர் திடீரென சாலை சுற்றுவட்டத்தின் இடது புறத்திலிருந்து
வலப்புறத்திற்கு மாறியதே இந்த விபத்துக்கு காரணம் என்பது தொடக்கக்
கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இதன் காரணமாக அந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் அந்த
காருடன் மோதி கட்டுபாட்டை இழந்ததோடு எதிர்த்தடத்தில் 25 வயது
ஆடவர் ஒட்டிச் சென்ற பெரேடுவா மைவி காரையும் மோதியது என அவர்
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
கை மற்றும் கால்களில் காயங்களுக்குள்ளான தர்மிஸி சிகிச்சைக்காக
மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர்,
இரு காரோட்டிகளும் காயமின்றித் தப்பியதாகச் சொன்னார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 43(1( பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என
அவர் மேலும் கூறினார்.


