கோலாலம்பூர், மார்ச் 14 - பயனர்களின் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சமூக ஊடகத்திற்கு அடிமையாகும் இயல்பற்ற பிரச்சனையைக் கையாள சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்ற, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) தயாராக உள்ளது.
மனநல பிரச்சனைகளைக் கையாள்வதற்கான தகுந்த நிபுணத்துவம், எம்சிஎம்சி மற்றும் தொடர்பு அமைச்சிடம் இல்லை என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
"எம்சிஎம்சி பொருத்தவரை, நாங்கள் அது குறித்த ஒரு வழிகாட்டியை வெளியிட தயாராக உள்ளோம். அதோடு, 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு பாதுகாப்பான வழிகாட்டிகளை உருவாக்கும் வகையில் அதன் தளங்களை முறைப்படுத்துவோம். ஆனால், 18 வயதைக் கடந்த பயனர்கள், தங்களின் சொந்த தேர்வுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்", என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில், பொறுப்புடனும் விவேகத்துடன் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்த தகவல்களை வழங்க எம்சிஎம்சி-யின் மூலம் தகவல் தொடர்பு அமைச்சு உறுதிப் பூண்டுள்ளதையும், தியோ சுட்டிக்காட்டினார்.
-பெர்னாமா


