ஷா ஆலம், மார்ச் 14 - மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு உரிய
உதவிகளை கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அத்தரப்பினரின்
வாழ்க்கை நிலை குறித்து மாநில அரசு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
ஆய்வு மேற்கொள்ளும்.
மாநிலத்தில் பரம ஏழ்மைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்துடன் முற்றுப்
புள்ளி வைக்கப்பட்ட போதிலும் மக்களின் நல்வாழ்வை உறுதி
செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பரம ஏழ்மையை கடந்த ஜூலை மாத இறுதியில், ஆகஸ்டு மாதத்தில்
முற்றாக ஒழித்து விட்டோம். இருப்பினும் இது குறித்து நாங்கள்
மனநிறைவு கொள்ளவில்லை என்று பிரதமரிடம் நான் சற்று முன்னர்
கூறினேன்.
குடும்பங்கள் ஏதேனும் மீண்டும் மிக வறிய நிலைக்கு தள்ளப்பட்டதா?
என்பதை கண்டறிய ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாங்கள் மறுபடியும்
ஆய்வு மேற்கொள்வோம். யாரேனும் இருந்தால் மாநிலம், சிலாங்கூர்
ஸக்கத் வாரியம், ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் மூலம் அவர்களுக்கு
உதவி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
கூட்டரசு அரசாங்கம், அமைச்சரவை மற்றும் மாநில அரசு நிர்வாகத்தின்
தொடர்ச்சியான முயற்சியாக இது விளங்குகிறது என்று நேற்றிரவு இங்கு
நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
அரசு ஏஜென்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன்
கடந்தாண்டு ஜூலை மாதத்துடன் மாநிலத்தில் பரம ஏழ்மைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டிற்குள் பரம ஏழ்மையை ஒழிக்க பன்னிரண்டாவது
மலேசியத் திட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும்,
அந்த இலக்கு இவ்வாண்டாகக் குறைக்கப்பட்டது.


