சபாக் பெர்ணம், மார்ச் 14 - கிசிஞ்சான், தாமான் ரியாவில் கடந்த
செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட புயலில் 48 வீடுகள் சேதமடைந்தன.
அந்த இயற்கைப் பேரிடரில் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு
இதுவரை 650,000 வெள்ளி என கணக்கிடப்பட்டுள்ளதாக சபாக் பெர்ணம்
மாவட்ட துணை அதிகாரி முகமது மர்வான் அகமது தஜூரி கூறினார்.
கடந்த மூன்று நாட்களாக தாங்கள் முழுமையான ஆய்வினை
மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு
எதும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக இந்த
பேரிடர் தொடர்பான செயலறிக்கை சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை
மன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மீடியா சிலாங்கூரிடம் அவர்
தெரிவித்தார்.
இந்த புயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19
பேர் இன்னும் டேவான் ஸ்ரீ சிகிஞ்சானில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக
நிவாரண மையத்தில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சிலர் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். நிவாரண
மையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கவனிப்பதற்காக சபாக் பெர்ணம்
மாவட்ட சமூக நலத்துறையினரும் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்களும்
அந்த நிவாரண மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளன என்று அவர்
கூறினார்.
கடந்த மார்ச் 6ஆம் ஆம் தேதி காலை 7.30 மணியளவில் சிகிஞ்சான் பாரிட்
4 பகுதியில் ஏற்பட்ட புயலுடன் கூடிய கனத்த மழையில் எட்டு வீடுகள்
சேதமடைந்தன.
இச்சம்பவத்தில் பாரிட் 4 தேசிய பள்ளியின் கூரை, ஆசிரியர் குடியிருப்பு,
சிற்றுண்டிச் சாலை, கார் நிறுத்துமிடம் ஆகியவையும் சேதமடைந்தன.


