சுக்காய், மார்ச் 13 - கடந்தாண்டு இறுதியில் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சந்தேகத்தின் பேரில் கெமமானில் உள்ள திறன் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் விரிவுரையாளர் ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முப்பத்தெட்டு வயதான அந்த நபரை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) வரை காவலில் வைக்க கெமமான் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஷரிபா அமிர்டா ஷாஷா அமீர் ஷரிபுடின் இன்று உத்தரவிட்டார்.
கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ராஸி ரோஸ்லியை பெர்னாமா தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். சந்தேக நபர் நேற்றிரவு 12.15 மணிக்கு கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
பதினெட்டு வயதான பாதிக்கப்பட்ட மாணவி நேற்று மாலை 3.38 மணிக்கு இச்சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு கார் மற்றும் பல பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் சொன்னார்.
இதர மாணவர்களும் இத்தகையச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது உள்பட பல கோணங்களில் தமது தரப்பு விரிவான விசாரணையை நடத்தி வருவதாக முகமட் ராஸி கூறினார்.


