NATIONAL

துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலால் தென் தாய்லாந்துக்குச் செல்ல வேண்டாம்

13 மார்ச் 2025, 8:19 AM
துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலால் தென் தாய்லாந்துக்குச் செல்ல வேண்டாம்

கோத்தா பாரு, மார்ச் 13 - கடந்த சனிக்கிழமை சுங்கை கோலோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, தற்போதைக்கு தென் தாய்லாந்துக்குச் செல்ல வேண்டாம் என கிளந்தான் மாநில மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தவிர்க்க முடியாத அலுவல்கள் இல்லாத பட்சத்தில் அங்கு பயணமாவதை ஒத்தி வைப்பதே நல்லது என மந்திரி புசார் டத்தோ மொஹமட் நஷ்ருடின் டாவுட் கூறினார்.

நோன்பு துறப்புக்கான உணவுகள் வாங்குவதற்கும் மற்றும் நோன்புத் துறப்பதற்கும் ஏராளமானோர் சுங்கை கோலோக் பட்டணத்திற்குச் செல்கின்றனர்.

ஆனால், உள்ளூரிலும் பலகாரங்கள் கிடைக்கும் என்பதனால், தற்போதைக்கு அந்த அண்டை நாட்டுக்குச் செல்லாமலிருப்பதே பாதுகாப்பானது என்று அவர் கூறினார்.

இவ்வேளையில் அந்த எல்லைப் பகுதியில் அதிகாரத் தரப்பு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கும் எனவும் மந்திரி புசார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், வழக்கமாகப் பரபரப்பாகக் காணப்படும் ரந்தாவ் பாஞ்சாங் எல்லை சோதனைச் சாவடி, இந்த இரட்டைத் தாக்குதலுக்குப் பிறகு வெறிச்சோடி கிடப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக நோன்புத் துறக்கச் செல்வோரால் மாலை 4 மணிக்கெல்லாம் சாவடியில் நெரிசல் காணப்படும். ஆனால், தற்போது அவ்விடம் அமைதியாகக் காணப்படுகிறது.

சனிக்கிழமை நடந்த தாக்குதலில் 2 தொண்டூழியக் காவ்ல்துறையினர் கொல்லப்பட்ட வேளை 8 பேர் காயமடைந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.