புத்ராஜெயா, மார்ச் 13 — சமூக ஊடகங்களில் 3ஆர் (சமயம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள்) தொடர்பான போலி உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும் 47 வயது உள்நாட்டு ஆடவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த ஆடவர் மார்ச் 9 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் போலி உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதாக நம்பப்படுகிறது என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
ஆயர் கூனிங் பள்ளிவாசலில் ஒலிபெருக்கிகள் மூலம் தொழுகைக்கான அழைப்பை விடுக்க (அஸான்) இனி அனுமதிக்கப்படவில்லை என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தைப்பிங் போலீஸ் நிலையத்தில் நேற்று அந்த நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தடயவியல் சோதனைக்காக அவரது கைப்பேசி மற்றும் சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த ஆணையம் கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 500,000 வெள்ளி வரை அபராதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 (1)(ஏ) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் 3ஆர் கூறுகளைக் கொண்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் பதிவேற்றுவதை தவிர்ப்பதோடு சமூக ஊடக தளங்களை பொறுப்புடனும் விவேகத்துடனும் பயன்படுத்துமாறு எம்.சி.எம்.சி. பொதுமக்களை அறிவுறுத்தியது.


