கோலாலம்பூர், மார்ச் 13 - இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடத்தப்பட்ட 2,679 அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட 9,904 சட்டவிரோதக் குடியேறிகளில் சுமார் 9,199 பேர் தங்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதே காலக்கட்டத்தில் 1959/63 குடிநுழைவுச் சட்டம் மற்றும் 1963-ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக, 348 முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்சுல் அனுவார் நசாரா கூறினார்.
அவர்களை திரும்பி அனுப்புவதற்கான செயல்முறை குடிநுழைவு துறையால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கை குடியுரிமையை சரிபார்ப்பது, திரும்பி செல்வதற்கான ஆவணங்களைத் தயார் செய்வது உட்பட அவர்களை தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பி அனுப்புவதற்கான செலவுகளையும் உட்படுத்தியது, என்றார் அவர்.
இவ்வாண்டில் உள்துறை அமைச்சு கைது செய்து மீண்டும் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பி அனுப்பப்பட்ட சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கை குறித்து அஸார் ஹசான் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா


