புத்ராஜெயா, மார்ச் 13 - இன்று காலை, தனக்கு எதிரான ஊழல் மற்றும் சட்டவிரோதப்
பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய
தலைமையகம் (எம்.ஏ.சி.சி.) வந்தடைந்தார்.
இன்று காலை 9.46 மணியளவில் இஸ்மாயில் பயணம் செய்த வாகனம், எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் நுழைவதைக் காண முடிந்தது.
நாட்டின் ஒன்பதாவது பிரதமரான இஸ்மாயில கடந்த மார்ச் 7ஆம் தேதி எம்.ஏ.சி.சி.யிடம் வாக்குமூலம் அளிப்பதாக இருந்தது. எனினும் அவரின் உடல் நிலை காரணமாக வாக்குமூலம் பதிவு செய்வது ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் 21ஆம் தேதி இஸ்மாயில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
பாதுகாப்பு இல்லம் ஒன்றிலிருந்து பல்வேறு நாடுகளின் நாணயங்களை உள்ளடக்கிய 17 கோடி வெள்ளி ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையில் இஸ்மாயில் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கடந்த மார்ச் 3ஆம் தேதி கூறியிருந்தார்.
அந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 16 கிலோ அசல் தங்கமும் கைப்பற்றப்பட்டது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக 20 லட்சம் வெள்ளியை உட்படுத்திய 13 வங்கிக் கணக்குகளை எம்.ஏ.சி.சி. முடக்கியது.


