கோத்தா கினபாலு, மார்ச் 13 - இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சபாவில் உள்ள 13 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 657 குடும்பங்களைச் சேர்ந்த 1,830 பேராகக் குறைந்துள்ளது. நேற்றிரவு 8.00 மணிக்கு இந்த எண்ணிக்கை 803 குடும்பங்களைச் சேர்ந்த 2,308 பேராக இருந்தது.
பியூபோர்ட் மாவட்டத்தில் உள்ள ஆறு நிவாரண மையங்களில் 450 குடும்பங்களைச் சேர்ந்த 1,343 பேர் தங்கியுள்ள வேளையில் டெனோமிலுள்ள ஆறு மையங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேரும் மெம்பகுட்டிலுள்ள ஒரு மையத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் அடைக்கலம் நாடியுள்ளதாக சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
டெனோமில் 20 கிராமங்கள் மற்றும் பியூபோர்ட் மற்றும் மெம்பகுட்டில் தலா 10 கிராமங்கள் உள்பட மொத்தம் 40 கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


