செராஸ், மார்ச் 13 - செராஸ் வட்டாரத்தில் சட்டவிரோதமாகவும்
அசுத்தமான முறையிலும் செயல்பட்டு வந்த இரு கோழி அறுப்பு
மையங்களுக்கு எதிராக மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின்
(ஜாய்ஸ்) ஆதரவுடன் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சு அதிரடிச் சோதனை மேற்கொண்டது.
விடியற்காலை 1.00 மணிக்கு நடத்தப்பட்ட இச்சோதனையில் கோழிகள்
மிகவும் அசுத்தமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் தரையில்
வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
நடவடிக்கையை நிறுத்தும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிடப்பட்ட
இவ்விரு மையங்களிலிருந்து 28,000 வெள்ளி மதிப்புள்ள 3,000 கிலோ
கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக மற்றும்
வாழ்க்கைச் செலவின அமைச்சின் கோலாலம்பூர் இயக்குநர் முகமது சப்ரி
செமான் கூறினார்.
இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பில் 2011ஆம் ஆண்டு வர்த்தக விபரச்
சட்டம், 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும்
1974ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த கோழி அறுப்பு மையங்கள் இரவு 8.00 மணி தொடங்கி அதிகாலை
3.00 மணி வரை செயல்பட்டு வந்ததோடு கோழி அறுக்கும் பணிக்கு
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன என்பது
சோதனையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது குடிநுழைவுத் துறையின் பல்வேறு
விதிகளை மீறிய குற்றத்திற்காக இந்தியா மற்றும் வங்காளதேசதைச்
சேர்ந்த 26 அந்நியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்
தெரிவித்தார்.
இதனிடையே, இம்மாதம் 2 முதல் நேற்று வரை ஹலால் முறையில் உணவுத் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய 11 ஹோட்டல்களில் ஜாக்கிம்
ஒத்துழைப்புடன் அமைச்சு சோதனை மேற்கொண்டது என்றும் அவர் சொன்னார்.


