ஷா ஆலம், மார்ச் 13 - செக்சன் 20இல் உள்ள தனது வீட்டிலிருந்து கடந்த
ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய 16 வயது பெண் கோல திரங்கானுவில்
உள்ள தனது தோழரின் வீட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் வீட்டை விட்டு
வெளியேறிய அப்பெண் செக்சன் 20 பஸ் நிலையத்திலிருந்து பஸ் ஏறி
புக்கிட் ஜாலில் சென்றதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் இரு தினங்களாக டாருள்
புக்கிட் ஜாலில் சூராவில் தங்கியிருந்த அப்பெண் பின்னர், பேஸ்புக் மூலம்
அறிமுகமான ஆண் நண்பர் ஒருவரைக் காண கோல திரங்கானுவுக்கு
பேருந்தில் பயணமானதாக அவர் சொன்னார்.
அந்த இளம் பெண் காணாமல் போனது தொடர்பில் அப்பெண்ணின்
குடும்பத்தினர் ஏற்கனவே தகவல் கொடுத்திருந்த நிலையில் அப்பெண்
திரங்கானு வந்த தகவலை அவரின் நண்பர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டார்.
அந்த நண்பரின் குடும்பத்தினர் உடனடியாக அப்பெண்ணை கோல
திரங்கானு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தனர்.
பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் அவர் என்பது
விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது என அவர் அறிக்கை ஒன்றில்
கூறினார்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நேற்று மாலை 5.11 மணியளவில்
கோல திரங்கானு வந்து அப்பெண்ணை உடன் அழைத்துச் சென்றனர்
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


