பட்டர்வொர்த், மார்ச் 12 - பினாங்கு செபராங் ஜெயா மற்றும் சிம்பாங் அம்பாட் ஆகிய இடங்களில் அரச மலேசிய சுங்கத் துறை (ஜே.கே.டி.எம்) மேற்கொண்ட இரு சோதனை நடவடிக்கைகளில் 200,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் வான வெடிகள் அடங்கிய 1,186 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செபராங் ஜெயா, பெர்மாத்தாங் பாவ் அருகே உள்ள ஒரு தொழிற்சாலை வளாகத்திற்கு அருகிலும் சிம்பாங் அம்பாட்டில் உள்ள ஒரு கடையிலும் பினாங்கு அமலாக்க நடவடிக்கைப் பிரிவினர் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி காலை 10.40 மணிக்கு ஏகக் காலத்தில் சோதனை மேற்கொண்டதாக மாநில ஜே.கே.டி.எம் இயக்குனர் ரோஹைசாட் அலி தெரிவித்தார்.
தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 127,397.26 வெள்ளி மதிப்புள்ள 718 பெட்டி பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் சுங்க வரி மதிப்பு 197,465.77 வெள்ளியாகும் என்று அவர் கூறினார்.
சிம்பாங் அம்பாட்டில் உள்ள ஒரு கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 97,946 வெள்ளி மதிப்புள்ள கொண்ட பட்டாசுகள் மற்றும் வாண வெடிகள் அடங்கிய 468 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் வரி மதிப்பு 151,816.30 வெள்ளியாகும் என அவர் சொன்னார்.
உள்துறை அமைச்சு மற்றும் அரச மலேசிய போலீஸ் படை வழங்கிய இறக்குமதி அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள விவரக்குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை அந்த வளாகங்கள் பின்பற்றவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த பறிமுதல் செய்யப்பட்டது என்றார் அவர்.
இன்று இங்குள்ள பாகான் ஜெர்மால் அமலாக்க கிடங்கு வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் பண்டிகை கால விற்பனைக்காக அங்கு வைக்கப்படிருக்கலாம் என நம்பப்படுகிறது. இரண்டு சோதனை நடவடிக்கைகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு மொத்தம் 225,343.26 வெள்ளியாகும். இதற்கு செலுத்த வேண்டிய வரி 349,283.07 வெள்ளி என மதிப்பிடப்படுகிறது.
விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட வளாகத்தின் உரிமையாளர்கள் என்று நம்பப்படும் 50 வயதுடைய ஒரு பெண் மற்றும் ஓர் ஆடவர் ஆகிய இருவரை தாங்கள் கைது செய்ததாக ரோஹைசாட் கூறினார்.


