புத்ராஜெயா, மார்ச் 12 - செமினியில் உள்ள தாமான் செமினி ஜெயாவில் மானிய விலை சமையல் எண்ணெய் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 30 வயது மதிக்கத்தக்க ஐந்து வெளிநாட்டினர் உட்பட ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 4.00 மணியளவில் நடத்தப்பட்ட இச்சோதனையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வளாகம் ஒன்று மானிய விலை சமையல் எண்ணெயை மாற்றுவதற்கான ளையமாக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் கூறினார்.
இந்த வளாகம் ஒரு கிலோ எடைகொண்ட மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வெட்டி பின்னர் அவற்றை ஐ.பி.சி. எனப்படும் இடைநிலை மொத்த கொள்கலன்களுக்கு மாற்றும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு ஸநாதுள்ளது. தொழில்துறைக்கு மறுவிற்பனை செய்யும் நோக்கில் இந்த மோசடி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சோதனையின் போது 40,000 வெள்ளி மதிப்புள்ள 4,168 கிலோ சமையல் எண்ணெய், வெட்டப்பட்ட பிளாஸ்டிக் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அடங்கிய நான்கு ஐபிசி கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அஸ்மான் கூறினார்.
கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் விளைவாக இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. குற்ற நோக்கத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக 1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது 2001ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


