புத்ராஜெயா, மார்ச் 12 - மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவோ அல்லது அவர்கள் ஈடுபாடு இன்றியும் தேவைகள் உள்ள தொகுதிகளில் தொடரப்படும்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீவிர வறுமையை ஒழிப்பதற்கான விரிவான முயற்சிகளும் அத்திட்டத்தில் அடங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"ஒதுக்கீடு தொடர்பாக, நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவோ அல்லது அவர்கள் ஈடுபாடு இன்றியும் மக்களுக்கான திட்டம் தொடரும், குறிப்பாக தீவிர வறுமை ஒழிப்பு என்பது எந்த பகுதிகள் என்பதை பொருட்படுத்தாமல் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
அரசாங்க ஒதுக்கீடுகளைப் பெறாததால், நிதிச் சுமைகளை அனுபவிப்பதாகக் கூறும் சில எதிர்காட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் தொடர்பில் டத்தோ ஶ்ரீ அன்வார் அதனை தெளிவுப்படுத்தினார்.
மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்ற எண்ணத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்தக் கூடாது என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
புத்ராஜெயாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு ஏற்பாடு செய்த ரமலான் மாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பிரதமர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.


