கோலாலம்பூர், மார்ச் 12 - மக்கள் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற உதவும் வகையில் நோன்பு பெருநாளுக்கு முன்னதாக மலிவு விற்பனைத் திட்டத்தை அரசாங்கம் விரிவுப்படுத்தும்.
அதில் மடாணி விற்பனைத் திட்டம், விவசாய சந்தையில் பெருநாளுக்கு முந்தைய விற்பனைத் திட்டம் மற்றும் அக்ரோ மடாணி விற்பனைத் திட்டம் ஆகியவை அடங்கும் என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அரிசி, தேங்காய், கோழி மற்றும் முட்டை உட்பட 11 முக்கிய உணவுப் பொருள்களின் விநியோகம் அனைத்து ரமலான் மற்றும் நோன்பு பெருநாளுக்கு போதுமானதாக இருக்கும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, கேபிகேஎம் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது.
அதோடு, 2025ஆம் ஆண்டின் `NACCOL` எனப்படும் வாழ்க்கை செலவினத்திற்கான தேசிய நடவடிக்கை மன்ற நிர்வாக செயற்குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி, அதன் துணை அமைச்சர் ஃபுசியா சாலே உட்பட அமைச்சின் மூத்த அதிகாரி, மாநில அரசாங்க பிரதிநிதிகள், தொழில்துறை தரப்பு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.


