வங்சா மாஜு, மார்ச் 12 - இடைத்தரகர்கள் லாபம் ஈட்டுவதை தடுப்பதற்காகக் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பாகோமில் இரட்டை முன்பதிவு இனி அனுமதிக்கப்படாது.
எதிர்வரும மார்ச் 17 தொடங்கி புஸ்பாகோம் செயல்படுத்தும் மேம்பாடுகளில் இந்த நடவடிக்கையும் அடங்கும் என்று கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
கோலாலம்பூர், வங்சா மாஜு புஸ்பாகோமில் உள்ள வாகனங்களின் பரிசோதனை செயல்பாட்டை அதன் தலைமை நிர்வாக அதிகாரி மாஹ்மூட் ரசாக் பாஹ்மான் மற்றும் ஜே.பி.ஜே தலைமை இயக்குனர் டத்தோ ஏடி பட்லி ரம்லியுடன் இணைந்து பார்வையிட்ட பின்னர், அங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோணி லோக் இதனை கூறினார்.
இதனிடையே, கோலாலம்பூர், வங்சா மாஜுவில் உள்ள கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் இவ்வாண்டு ஜூன் மாதம் மூட திட்டமிட்டிருந்த நிலையில் அது அடுத்தாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
தற்போது சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங்கில், புதிய வசதிகளைக் கொண்டு அதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
வாங்சா மாஜு கிளையின் கீழ் செயல்படும் புஸ்பாகோம், சில பள்ளிகளுக்கு அருகில் இருப்பதால் அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


