குவாந்தான், மார்ச் 12 - மூன்று வயது பெண் குழந்தையை படுக்கொலை செய்ததாகக் குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குற்றஞ்சாட்டப்பட்ட 32 வயதான நூர் நபிலா சேக் ருஸ்லான் என்ற அப்பெண்ணிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கும் இரவு 8.00 மணிக்கும் இடையே இங்குள்ள புக்கிட் ரங்கின் டாமாய், புக்கிட் ரங்கின் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஐஸ்யா அப்துல் வஹாப் வழக்கை நடத்தும் வேளையில் குற்றம் சாட்டப்பட்ட நூர் நபிலா சார்பாக வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி குவாந்தான் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று வயது சிறுமி துன்புறுத்தல் காரணமாக இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. விசாரணைக்கு உதவுவதற்காக 17 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆறு நபர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.


