கோலாலம்பூர், மார்ச் 12 - இவ்வாண்டு தேசிய ஊடகவியலாளர் தினக் (ஹவானா) கொண்டாட்டம் வரும் ஜூன் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும்.
ஊடகவியலாளர்ளை கெளரவிக்கும் நோக்கிலான நிகழ்வுக்கான சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
ஹவானாவின் அமைப்பின் ஏற்பாடு தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சு தற்போது பல விஷயங்களை ஆராய்ந்து வருகிறது. இறைவன் அருளால் இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு ஊடக நண்பர்களுக்கு உதவக்கூடிய பல முக்கிய அறிவிப்புகளை நாங்கள் வெளியிடுவோம் என்று அவர் கூறினார்.
நேற்றிரவு அங்கசாபுரியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான இப்தார் விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் கலந்து கொண்டப் பின்னர் ஃபாஹ்மி செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமது பவுசி முகமது இசா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆசியான் முழுவதும் உள்ள ஊடக அமைப்புகளை ஒன்றிணைத்து உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ஊடகத் துறையில் உள்ள சமீபத்திய சவால்களை அடையாளம் காணவும் உதவும் ஒரு தளமாக இந்த ஆண்டு நடைபெறும் ஹவானா கொண்டாட்டம் விளங்கும் என்று
ஃபாஹ்மி கூறியிருந்தார்.
இவ்வாண்டு மலேசியா ஏற்றுள்ள ஆசியான் தலைமைப் பொறுப்பை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆசியானைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை ஹவானா அழைக்கும் என்றும் அவர் கூறினார்


