கோத்தா கினபாலு, மார்ச் 12- சபாவில் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 916 குடும்பங்களைச் சேர்ந்த 2,655 ஆகக் குறைந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,488 குடும்பங்களைச் சேர்ந்த 3,114 பேராக இருந்தது.
வெள்ள நிலைமை சீரடைந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் ஒரு அறிக்கையில் கூறியது.
வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அது தெரிவித்தது.
பியூபோர்ட்டில் உள்ள ஏழு நிவாரண மையங்களில் 556 குடும்பங்களைச் சேர்ந்த 1,719 பேர் இன்னும் தங்கியுள்ளனர். மெம்பகுட்டில் உள்ள ஐந்து மையங்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேரும் தெனோமில் உள்ள ஒன்பது மையங்களில் 210 குடும்பங்களைச் சேர்ந்த 514 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.
மொத்தம் 36 கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெனோமில் உள்ள 16 கிராமங்களும் பியூபோர்ட் மற்றும் மெம்பகுட்டில் தலா 10 கிராமங்களும் அவற்றில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


