கோலாலம்பூர், மார்ச் 12 – தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்திடம் (PTPTN) வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் கறுப்புப் பட்டிலியலிடப்பட்டவர்களுக்கு, வெளிநாடு செல்ல தடைவிதிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
அத்தடை அமுலில் இருந்த போது PTPTN கடன் வசூலிப்பில் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஆனால், அத்தடை அகற்றப்பட்டு விட்டதாக உயர் கல்வி துணை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடன் வசூலிப்புக்கு அதுவே சிறந்த வழியா என்பது தற்போது ஆராயப்படுகிறது. அதே சமயம் வேறு சில வழிமுறைகளும் பரிசீலனையில் உள்ளதாக துணை அமைச்சர் சொன்னார்.
PTPTN கடனாளிகள் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 2018-ஆம் ஆண்டு அகற்றப்பட்ட நிலையில், அதனை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குத் அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அத்தடை அமுலில் இருந்த போது கடன் வசூலிப்பு 4 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. அகற்றப்பட்ட பிறகு படிப்படியாகக் குறைந்து வருவதாக செனட்டர் டத்தோ ரொஸ்னி சொஹார் தனது கேள்வியில் சுட்டிக் காட்டியிருந்தார்.
கடந்த டிசம்பர் வரையிலான தகவலின் அடிப்படையில், PTPTN கடன் அங்கீகரிக்கப்பட்ட 4.10 மில்லியன் பேரில் 383, 637 பேர் அல்லது 13.55 விழுக்காட்டினர் அறவே கடனைத் திருப்பிச் செலுத்தியதில்லை என்றும் டத்தோ முஸ்தபா குறிப்பிட்டார்.


