சபாக் பெர்ணம், மார்ச் 12 - மாநிலத்தில் அடிக்கடி புயல் அல்லது சூறாவளி
ஏற்படும் பகுதிகளை மையமாகக் கொண்டு சிலாங்கூர் மாநில தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறை முழு விழிப்பு நிலையை அமல்படுத்தியுள்ளது.
இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழும் இடங்களில் குறிப்பாக,
சிகிஞ்சானில் தாங்கள் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி
வான் இஸ்மாயில் கூறினார்.
எதிர்வரும் மார்ச் 20ஆம் தேதி ஷா ஆலமில் நடைபெறவிருக்கும் நாட்டிலுள்ள
அனைத்து தீயணைப்புத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்
கூட்டத்தில் தாங்கள் முன்வைக்கவுள்ள தீர்மானங்களில் இதுவும்
ஒன்றாகும் என அவர் சொன்னார்.
சிகிஞ்சான் தீயணைப்பு நிலையத்தில் நேற்று சபாக் பெர்ணம் 7வது
மண்டலத்தின் நோன்பு துறப்பு மற்றும் தெராவே தொழுகையில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
புயல் பேரிரை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குறித்து வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் மாநில பேரிடர்
செயல்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் வான் முகமது ரசாலி
கூறினார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் வீசிய கடும் புயல் காரணமாக
சிகிஞ்சான் தாமான் ரியாவில் உள்ள 30 வீடுகள் சேதமடைந்தன. அங்கு
திறக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையத்தில் மூன்று குடும்பங்களைச்
சேர்ந்த 13 தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 6ஆம் தேதி காலை 7.00 மணிக்கு சிகிஞ்சான், பாரிட் 4,
ஜாலான் பான் லேசேனில் ஏற்பட்ட புயல்காற்றுடன் கூடிய பலத்த
மழையில் எட்டு வீடுகள் சேதமடைந்தன.


