கோலாலம்பூர், மார்ச் 12 — ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் கொலை தொடர்பில் புதிய ஆதாரங்களைக் காவல்துறை பெற்றுள்ளது.
வாட்ஸ்அப் செயலி வழியாக டிக்டாக் இணைப்பில் பெறப்பட்ட அந்த ஆதாரத்தை ஜெய்ன் ரய்யானின் தாயார் இஸ்மானிரா அப்துல் மனாஃப் காவல் துறையிடம் ஒப்படைத்ததாக சுங்கை பூலோ காவல்துறைத் தலைவர் முகமது ஹபீஸ் முகமது நோர் கூறினார்.
ஜெய்ன் ரய்யான் மற்றும் அவரது ஆறு வயது சகோதரனின் கைகளைப் பிடித்துக்கொண்டு புகார்தாரர் சிலாங்கூர், டாமன்சாரா டாமாய், இடமான் அபார்ட்மென்ட், புளோக் ஆர் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடம் நோக்கி நடந்து செல்வதை அந்த ஒரு நிமிட காணொளி காட்சி காட்டுகிறது.
இந்த காட்சிகள் இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு புளோக்கிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரால் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் புகார்தாரர் நம்புகிறார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக இஸ்மானிரா இந்த புகாரை செய்ததாக ஹபீஸ் மேலும் கூறினார்.
இந்த காணொளி பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஜெய்ன் ரய்யான் இறந்து கிடந்ததால் இது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும் புகார்தாரர் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புகார் குறித்து தாங்கள் விசாரித்து வருவதாகவும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய அல்லது சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஊகங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களை தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் என்று அவர் கூறினார்.
ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவனான ஜெய்ன் ரய்யான் கடந்த 2023 டிசம்பர் 5ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது. மறுநாள் அவரது உடல் டமான்சாரா டாமாய், இடமான் அபார்ட்மெண்டில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள நீரோடையில் கண்டு பிடிக்கப்பட்டது.


