ஷா ஆலம், மார்ச் 12- இங்குள்ள செக்சன் 20இல் உள்ள தனது
வீட்டிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறியப் பதின்ம வயது
இளம் பெண் இன்னும் வீடு திரும்பவில்லை என காவல் துறையில் புகார்
செய்யப்பட்டுள்ளது.
தன் மகள் காணாமல் போனது தொடர்பில் அவரின் தந்தையான 46 வயது
ஆடவர் நேற்று காலை 9.27 மணியளவில் போலீசில் புகார் செய்ததாக
ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால்
இப்ராஹிம் கூறினார்.
கைப்பேசியில் அதிக நேரத்தைச் செலவிட்டதை தந்தை கண்டித்ததோடு
இணைய தரவு நேரத்தையும் கட்டுப்படுத்தியதால் அப்பெண் கோபித்துக்
கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது என்று அவர்
தெரிவித்தார்.
அந்த இளம் பெண் இறுதியாக வெள்ளை நிற முழுக்கை சட்டை, கருப்பு
நிற கால் சட்டை அணிந்து முதுகில் பேக் ஒன்றை சுமந்தவாறு வீட்டை
விட்டு வெளியேறியதாக அவர் சொன்னார்.
நால்வர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான அப்பெண் ஷா
ஆலமில் உள்ள பள்ளி ஒன்றில் நான்காம் படிவம் பயின்று வந்ததாக அவர்
மேலும் சொன்னார்.
அப்பெண் குறித்த தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரி நோர்
சப்ரினா முகமது தஹாவை 014-5130450 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளுமாறு அவர் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டார்.


