ஷா ஆலம், மார்ச் 11- ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் (ஏ.எஸ்.எஃப்.) பாதிக்கப்பட்ட மொத்தம் 76,000 பன்றிகள் இந்த மாத இறுதிக்குள் அழிக்கப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கோல லங்காட் மற்றும் சிப்பாங்கில் உள்ள 56 பண்ணைகளில் கால்நடைகளை அழித்தல் மற்றும் அகற்றுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று என்று டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.
சிலாங்கூர் மாநில கால்நடை சேவைத் துறை கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி 114 பன்றிப் பண்ணைகளில் நடத்திய ஆய்வுகளில் 56 கால்நடைகளுக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.
ரமலான் மாதத்தில் கூட அழிப்பு மற்றும் அகற்றும் பணிகள் தொடர்கின்றன. வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் 76,000 பன்றிகளையும் அப்புறப்படுத்த இலக்கு வைத்துள்ளோம்.
இந்த நோயால் பாதிக்கப்படாத கால்நடைகளை இறைச்சி நோக்கங்களுக்காக உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களுக்கு இடமாற்றம் செய்ய இன்னும் அனுமதிக்கப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பன்றிக் காய்ச்சல் பரவல் தொடர்பாக புகார் வந்ததைத் தொடர்ந்து இந்நோய் உறுதி செய்யப்பட்ட மாநிலத்தில் உள்ள மூன்று பன்றிப் பண்ணைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக இஷாம் சமீபத்தில் கூறியிருந்தார்.
சிப்பாங், சுங்கை பிளாங்கனில் உள்ள இரு பண்ணைகளும் தஞ்சோங் சிப்பாட், கம்போங் தும்போக்கில் உள்ள ஒரு பண்ணையும் இந்நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதாக அவர் கூறினார்.


