கோலாலம்பூர், மார்ச் 11 - வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் வடிவலான தின்பண்டங்கள் உட்பட மாணவர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளைப் பள்ளி வளாகத்தில் விற்பனை செய்வதைத் தடைசெய்யும் கல்வி அமைச்சின் அணுகுமுறையைச் சுகாதார அமைச்சு வரவேற்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்திருக்கிறார்.
2024-ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி அமலில் இருக்கும், பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருள்கள் கட்டுப்பாடு சட்டம் 852க்கு ஏற்ப கல்வி அமைச்சின் இந்நடவடிக்கை அமைந்திருப்பதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.
மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தான உணவுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தயக்கம் காட்டாது என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் முன்னதாகக் கூறியிருந்தார்.
VAPE வடிவிலான மிட்டாய்களும், போதைப் பித்தர்கள் பயன்படுத்தும் ஊசி வடிவிலான சாக்லேட்களும் பள்ளி வளாகங்களில் விற்கப்படுவதாக, அண்மையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


