புத்ராஜெயா, மார்ச் 11 - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும் விதிமுறைகள், கடுமையாக இருப்பதாக பெரிகாதான் நெஷனல் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியிருப்பது குறித்து, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் கருத்துரைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் நிபந்தனைகளை சமர்ப்பித்திருந்தாலும், தற்போது வரை எதிர்க்கட்சிகளிடமிருந்து எந்த பதிலும் பெறப்படவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
"புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அதன் விதிமுறைகள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. இதன்வழி, பொதுமக்களுக்குத் தெரியும். உடன்படவில்லை என்றால், ஓர் எதிர் திட்டத்தை முன்வைக்கலாம்.
ஆனால், அவர்கள் விதிமுறைகள், கடுமையாக இருப்பதாகக் கூறி முற்றிலுமாக அதை நிராகரித்துவிட்டனர்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு குறித்து விரிவான விளக்கம் அளிக்காததால், முன்னாள் பிரதமரின் கருத்துகளையும் அதன் நோக்கங்களையும் ஃபடில்லா கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகளிடமிருந்து பரிந்துரைகள் இருந்தால், இவ்விவகாரத்தை அரசாங்கக் கட்சிக் செயற்குழு கூட்டத்திற்குக் கொண்டுச் செல்ல தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


