புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 11- இங்குள்ள மச்சாங் புபோக், ஜாலான் காஜா மத்தியில் இன்று காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு குற்றவாளி கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.20 மணியளவில் நிகழ்ந்ததாகப் பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.
அந்தப் பகுதியில் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுத் துறை குழு, யமஹா லெஜெண்டா 115ZR ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியை அணுகி தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சோதனைக்காக நிறுத்தும்படி உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
ஆனால், அந்த சந்தேகப் பேர்வழி உத்தரவைப் புறக்கணித்து அங்கிருந்து தப்பியோட முயன்றார். சந்தேக நபரை வேகமாகத் பின்தொடர்ந்த போலீசார் அவரை முந்திச் சென்றனர். திடீரென்று அந்த நபர் காவல்துறை அதிகாரிகள் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
தற்காப்புக்காகவும், சக போலீஸ்காரர்களின் பாதுகாப்பிற்காகவும் அந்த நபரை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இத்தாக்குதல் காரணமாக சரிந்து விழுந்த அந்த நபரிடம் நடத்தப்பட்டச் சோதனையில் ஒரு க்ளாக் ரக கைத்துப்பாக்கியும் ஹெராயின் என சந்தேகிக்கப்படும் கணிசமான அளவு போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹம்சா கூறினார்.
சந்தேக நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஏனெனில், அவரிடம் எந்த அடையாளப் பத்திரமும் காணப்படவில்லை. எனினும், 30 லயது மதிக்கத்தக்க அந்த நபர் ஒரு வெளிநாட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது என அவர் கூறினார்.


