ஜோகூர் பாரு, மார்ச் 11- மளிகைக் கடை ஒன்றை விநியோக மையமாகக்
கொண்டு செயல்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை
போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இங்குள்ள தாமான் யுனிவர்சிட்டியில் உள்ள அந்த மளிகைக் கடையில்
இம்மாதம் 5ஆம் தேதி இரவு 7.00 மணியளவில் போலீசார் மேற்கொண்ட
அதிரடிச் சோதனையில் மூவர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு
உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹிண்டர் சிங்
கூறினார்.
போதைப் பொருளை சேமித்து வைக்கும் மற்றும் விநியோகிக்கும்
மையமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இந்த மளிகைக்
கடையிலிருந்து 346,225 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்
பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இக்கும்பல் கடந்த ஜனவரி மாதம் முதல் சிறு அளவிலான போதைப்
பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர் அந்த மளிகைக் கடை உரிமையாளராவார்
என்று நேற்று இங்குள்ள ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ்
தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
இந்த சோதனையின் போது 1 கிலோவுக்கும் அதிகமான ஷாபு போதைப்
பொருள். 1.8 கிலோ எக்ஸ்டசி போதை மாத்திரைகள், ஒரு கிலோ கஞ்சா,
ஆகியவற்றோடு எட்டு வாகனங்கள் மற்றும் 1,000 வெள்ளி ரொக்கம்
பறிமுதல் செய்யப்பட்டது என அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 22 முதல் 29
வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களில் இருவர் மீது போதைப்
பொருள் மற்றும் குற்றவியல் பதிவுகள் உள்ளதாகவும் அவர் சொன்னார்.
போதைப் பொருள் கிடைத்த விதம் மற்றும் இதர சந்தேகப்பேர்வழிகளின்
ஈடுபாடு குறித்து அறிந்து கொள்வதற்காகக் காவல் துறையினர் விசாரணை
நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.
இந்த சம்பவம் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.


