ஷா ஆலம், மார்ச் 11 - உலகின் மிகப்பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியான ஐ.டி.பி. பெர்லின் 2025 நிகழ்வில் ஐந்து பிரத்தியேக பயணப் தொகுப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அடுத்தாண்டு ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை 20 விழுக்காடு அதிகரிக்க சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
டஸ்கி லீஃப் அட்வென்ச்சர்ஸ் அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்ட இப்புதிய சலுகைகள் ஐரோப்பிய பயணிகள் மத்தியில் மாநிலத்தின் ஈர்ப்பை அதிகரிக்கும் என்று டூரிசம் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 2024 செப்டம்பர் மாத நிலவரப்படி ஐரோப்பாவிலிருந்து 139,131 சுற்றுலாப் பயணிகளை சிலாங்கூர் ஈர்த்துள்ள வேளையில் இவ்வாண்டு மேலும் அதிகரிப்பை எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
டஸ்கி லீஃப் அட்வென்ச்சர்ஸ் அமைப்புடனான எங்கள் ஒத்துழைப்பு ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றவாறு உயர்தரம் கொண்ட மற்றும் பரந்த அனுபவங்களை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இந்த ஐந்து சுற்றுலா தொகுப்புகளும் சிலாங்கூரின் தனித்துவமான சலுகைகளை வெளிப்படுத்துவதோடு ஐரோப்பிய பயணிகளிடம் எங்கள் ஈர்ப்பை வலுப்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
'வியப்பூட்டும் சிலாங்கூர்' என்ற மாநிலத்தின் 2025 சிலாங்கூர் வருகை ஆண்டு பிரச்சாரத்தின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பயணத் தொகுப்புகள் மாநிலத்தின் மாறுபட்ட சுற்றுலா சலுகைகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
'சிலாங்கூர் — வியக்கத்தக்க தனித்துவமான அனுபவங்கள்' என முத்திரையிடப்பட்ட தொகுப்புகளில், உண்மையான தனித்துவமான பந்திங், செராஸில் உள்ள மலேசிய சமையல் வகுப்பு, மயக்கும் கோல சிலாங்கூர், இயற்கைக் காட்சி நிறைந்த சபாக் பெர்ணம் மற்றும் கம்போங் லைஃப் ஆஃப் உலு லங்காட் ஆகியவை அடங்கும்.


