கோலாலம்பூர், மார்ச் 11 - மலேசியாவில் பல்லின சமூகங்களுக்கிடையே பதற்றத்தைத் தூண்டி உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மதம் சார்ந்த எந்தவொரு விவாதமும் நிறுத்தப்பட வேண்டும்.
நாட்டு மக்களின் பன்முகத்தன்மையை அறிந்து கொண்டு, மதம் சார்ந்த விவாதங்களை மரியாதையோடும் விழிப்புணர்வோடும் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் கூறியுள்ளார்.
நாட்டில் பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் இருந்தபோதிலும், மலேசிய மக்களை ஒன்றிணைக்கக்கூடிய அடிப்படை மற்றும் உலகளாவிய விவகாரங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று ஏரன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
மத நம்பிக்கையாளர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் `Harmoni MADANI` எனும் திட்டத்தின் வழி தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, ஒரு கலந்துரையாடல் தளத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவான அம்சங்களை முன்னிலைப்படுத்த, இந்த HARMONI உரையாடல் தளத்தை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஏரன் பரிந்துரைத்துள்ளார்.


