ஜோகூர் பாரு, மார்ச் 11 - ஜோகூர் பாருவில், இம்மாதம் 4-ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில் சுமார் 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த போதைப் பொருட்களை பானங்கள் அடங்கிய பாக்கெட்டுகளில் கலந்து விற்பனை செய்த, இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஜோகூர் மாநில போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) கைது செய்ததாக, அம்மாநில காவல்துறை தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.
இந்த சம்பவத்தில் இரு உள்ளூர் ஆடவர்கள் மற்றும் 25 முதல் 29 வயதுக்குட்பட்ட வியட்நாமிய பெண் ஒருவர் இந்த சோதனை நடவடிக்கையில் கைதாகினர்.
ஜோகூர் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இருவரும், அருகில் உள்ள தங்கும் விடுதியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக, ஜோகூர் பாரு காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ எம்.குமார் கூறினார்.
மேலும், இரண்டு கார்கள், 15,450 ரிங்கிட் ரொக்க பணம், மற்றும் 25,040 ரிங்கிட் மதிப்பிலான நகைகளையும் காவல்துறை அவர்களிடமிருந்து கைப்பற்றி உள்ளது.


