சிரம்பான், மார்ச் 11 - இங்குள்ள ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 1 இல் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மேலும் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இம்மாதம் 6ஆம் தேதி முதல் இங்குள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த 17 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி இரவு 7.23 மணிக்கு உயிரிழந்தததாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஹத்தா சே டின் தெரிவித்தார்.
உயிரிழந்த அந்த இளைஞர் சம்பவத்தின் போது தனது 13 வயது சகாவுடன் ஹோண்டா வேரியோ மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரின் சகாவும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் காரின் ஓட்டுநரான 18 வயது இளைஞர் மற்றும் 17 வயது பயணி ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் நேற்று இரவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 1, மத்தாஹாரி ஹைட்ஸ் சாலை சமிக்ஞை விளக்கு சந்திப்புக்கு அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை ஹோண்டா ஜாஸ் கார் மோதியதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன .


