(ஆர்.ராஜா)
ஷா ஆலம், மார்ச் 11- குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கான உயர்கல்விக்கூட நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ளன.
மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த நிதியுதவித் திட்டத்திற்கு இம்மாதம் 3ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் மாநில அரசு முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய இன்னும் நான்கு தினங்களே எஞ்சியுள்ளதால் மாணவர்கள் விரைந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் தைறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்
இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம் 3,000 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம்
2,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.
இந்த கல்விக் கட்டணம் ஒரு மாணவருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அந்த உதவித் தொகை இம்முறை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக வழங்கப்படும்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அல்லது தனியார் உயர் கல்விக்கூடங்களில் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டில் பட்டப்படிப்பையும் முதலாம் ஆண்டில் டிப்ளோமா படிப்பையும் மேற்கொள்ளும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது பத்தாண்டுகளுக்கும் மேல் இம்மாநிலத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்ப பாரங்களை போஸ்டரில் காணப்படும் கியூ.ஆர். குறியீடு மூலம் பதிவிறக்கம் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்கள்
https://ls.selangor.my/Cefq3 என்ற இணைப்பை பயன்படுத்தலாம் அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு அலுவலகத்தில் பாரங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
03-55447307 என்ற தொலைப்பேசி எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.


