கோலாலம்பூர், மார்ச் 11- மலேசியாவின் வளர்ச்சி பாணியை, குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் கல்வித் துறைகளை வலுப்படுத்துவதில் உதவும் மஜ்லிஸ் அமானா ராக்யாட் (மாரா) அணுகுமுறையை முன்மாதிரியாகக் கொள்ள பிஜி ஆர்வம் தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக
பிஜி பிரதமர் சித்திவேனி ரபுக்காவிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட உரையாடலின் போது இவ்விஷயம் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவரின் இந்த விருப்பத்தை நான் வரவேற்கிறேன். மேலும், இந்தத் துறைகளில் மலேசியாவின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (திவேட்) திட்டங்களில் பிஜியிலிருந்து மாணவர்கள் வருவதை மலேசியா வரவேற்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம்), தகவல் தொழில்நுட்பம் மற்றும் மலேசியா தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தின் (எம்.டி.சி.பி.) கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க பிஜி பிரதமரை தாம் அழைத்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த முன்னெடுப்பு பயிற்சி மற்றும் நிபுணத்துவப் பகிர்வு மூலம் மனித வள மேம்பாட்டிற்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
இண்டு தொடக்கத்தில் கோலாலம்பூரில் பிஜி தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த அன்வார், இது மலேசியாவுடனான அரசதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் பிஜியின் உறுதியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்றார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள ரபுக்காவுக்கு நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் அழைப்பு விடுத்தார்.


