கோலாலம்பூர், மார்ச் 10 - மலாயன் மென்ஷன் கட்டடம் அருகே உள்ள கிள்ளான் ஆற்றில் முதலை ஒன்று தென்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 10.20 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து, இச்சம்பவ இடத்திற்கு கோலாலம்பூர் பொது தற்காப்புப் படை 2 குழுக்களை அனுப்பி வைத்தது.
பின்னர், காவல்துறையினர், வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை (PERHILITAN) துணையுடன் முதலையைப் பொறி வைத்துப் பிடிக்க இரவு 11 மணிக்கு கூண்டோடு தயாராக இருந்தனர்.
ஆனால், அதன் பிறகு அதனைக் காணவில்லை என கோலாலம்பூர் பொது தற்காப்புப் படை அதிகாரி அமாட் ஜூனைடி டுகுட் சுஹார்தோ கூறினார்.
மோசமான வானிலை மற்றும் பெருக்கெடுத்து ஒடும் ஆற்று நீரால் முதலையைப் பிடிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாதுகாப்புக் கருதி, பொது மக்கள் அப்பகுதியை நெருங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
3 மீட்டர் நீளம், 500 கிலோ கிராம் எடையிலான அந்த இராட்சத முதலை முதன் முறையாக ஜனவரி 25-ஆம் தேதி மஸ்ஜிட் ஜாமேக் அருகே தென்பட்டது.
பிறகு பிப்ரவரி 20-ஆம் தேதி `The Gardens Midvalley` மற்றும் `KL Eco City` பேரங்காடிகளுக்கு அருகே உள்ள ஆற்றில் அது காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


